விருதுநகர் அருகே தொழிலாளர்கள் சாலை மறியல்
விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைவாக கூலி வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைவாக கூலி வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மீசலூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளங்கள் தூர்வாரும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரந்தோறும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூலி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ரேணுகாதேவி மற்றும் எழுத்தர் ஆகியோர் கூலி வழங்கியுள்ளனர். அதில், ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கூலியாக ரூ.30 வீதம் 6 நாள்களுக்கு ரூ.180 வரையில் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் வியாழக்கிழமை பணிக்கு வந்தனர். அதையடுத்து கூலியை குறைவாக வழங்கியதை கண்டித்து மீசலூர் விலக்கில் விருதுநகர்-சிவகாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தகவலறி்நது சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரன் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கிராம மக்கள் கூலி மிகவும் குறைவாக இருப்பதால் இத்தொகையை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாத நிலையில் பெண்கள் இருப்பதாகவும், அதனால் கூலியை உயர்த்தி வழங்கவும் வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, கோட்டாட்சியர் குணசேகரன், அரசு விதிமுறைப்படி வேலை செய்கிற அளவிற்கு கூலி வழங்கப்படும். முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு பணியை முடித்தால் கிடைக்கும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், விருதுநகர்-சிவகாசி சாலையில் அரை மணிநேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.