முகப்பு
தற்போதைய செய்திகள்

விளைநிலங்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விருதுநகர் ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தி பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தி பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, வேளாண்மை துறை இணை இயக்குநர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள்-அதிகாரிகளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:

Advertisement

     இம்மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் கிடைப்பதற்கு, மறுபடியும் விளைநிலங்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும். அதேபோல், பட்டதாரர் பெயரில் வறட்சி நிவாரணம் வந்துள்ளதால், வாரிசுதாரர்கள் கேட்டால் கிடைக்காத நிலையே உள்ளது. அதனால், நில உரிமையாளர்களின் உண்மை தன்மை அறிந்து கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் சான்றிதழ்கள் மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

    மேலும், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பட்டா பெயர் மாற்றப்படாமலே உள்ளது. எனவே உடனே மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும். இதுபோன்ற பட்டா குளறுபடிகளால் விவசாயிகள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாத நிலையேற்படுகிறது. அதனால், விவசாயிகளுக்கான சிறப்பு திட்ட முகாம் நடத்தி மாற்றிக் கொடுக்க வேண்டும்.

    தற்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதேபோல், அனைத்து நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டம் மூலம் அரசு அமைத்துக் கொடுத்தால் போதிய நீர் ஆதாரம் பெற்று பயன்பெறுவார்கள் என கேட்டுக் கொண்டனர்.

     இதற்கு பதிலளித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பேசுகையில், வறட்சி நிவாரணத்தில் விடுபட்டுப் போன விவசாயிகள் அனைவருக்கும் மறுபடியும் கணக்கெடுப்புச் செய்யப்படும். ஏற்கனவே பட்டதாரர் பெயரில் உள்ளதை, அவரது வாரிசுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய ஆவணங்களின் அடிப்படையில்  அத்தாட்சியுடன் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     சிறு குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுப்பது போல், நடுத்தர விவசாயிகளுக்கும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஒவ்வொரு மாதமும், கடை வார வியாழக்கிழமை அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். அதில், விவசாயிகளின் பட்டா பிரச்னை சம்பந்தமானவைகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) முருகதாஸ், கோட்டாட்சியர்கள் குணசேகரன், ரெங்கன் மற்றும் வனக்கோட்ட அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.