சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக பெண் உள்ளிட்ட 4 பேர்களை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
சேலம் ரத்தினசாமிபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). தனது தந்தை தனபாலனுக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரித்துக் கொண்டதாக செந்தில்குமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலுவிடம் ஒரு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தும்படி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு சக்திவேல் உத்தரவிட்டார்.அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் முனியப்பன், ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் தெரிய வருவதாவது:
இரும்பாலை ராசி நகரைச் சேர்ந்த ஏழுமலை (58), என்பவருக்கு சொந்தமான 1.69 ஏக்கர் நிலம் ஆட்டையாம்பட்டியில் இருந்துள்ளது. இந்த நிலத்தின் மீதான அதிகாரத்தை ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு ஏழுமலை கடந்த 1988-ம் ஆண்டில் வழங்கியுள்ளார். இதற்கான பொது அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆறுமுகம் அந்த நிலத்தை ரத்தினசாமிபுரத்தைச் சேர்ந்த தனபாலனுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலையில் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட நிலத்துக்கு ஏழுமலை, அவரது மகன்கள் சரவணன் (33), ரஞ்சித்குமார், மகள்கள் செந்தமிழ்ச்செல்வி (37), லதா ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டில் போலி ஆவணங்கள் தயாரித்திருப்பதும், பின்னர் அந்த நிலத்தை பழனிசாமி (51) என்பவருக்கு விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஏழுமலை, சரவணன், செந்தமிழ்ச்செல்வி, பழனிசாமி ஆகிய 4 பேர்களையும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித்குமார், லதா இருவரையும் தேடி வருகின்றனர். ரஞ்சித்குமார் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.