பேருந்து மோதி பெண் பலி: ஆத்திரத்தில் மக்கள் பேருந்துக்கு தீவைப்பு
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே பெட்டதாபுரம் என்ற இடத்தில், தனியார் பேருந்து மோதி பெண் ஒருவர் பலியானார்.
கோவை காரமடை அருகே கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் ஹேமலதா(வயது 20). இவர், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சொப்பம்பட்டியில் உள்ள டைமண்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இன்று காலையில் தனியார் பஸ்ஸில் ஏறினார். இடம் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். இந்தப் பஸ் கோவை மேட்டுபாளையம் அருகே பெட்டதாபுரம் பகுதியில் வந்தபோது கீழே தவறி விழுந்து பின்சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பெண் மீது மோதிவிட்டு, நிற்காமல் அந்தப் பேருந்து வேகமாகச் சென்றதால், விபத்தை அறிந்த பொதுமக்கள், விரட்டிச் சென்று, பேருந்தை மடக்கி, பேருந்திலிருந்து பயணிகளை இறக்கி விட்டு, பேருந்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
மேலும் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பணிபுரியும் டைமண்ட் கம்பெனி பெண் தொழிலாளர்கள் பலரும் இவ்வாறே தொங்கிக் கொண்டு செல்வராம். இவர்களை இந்த தனியார் பேருந்து மட்டுமே நிறுத்தி ஏற்றிச் செல்லும் என்று கூறுகின்றனர்.