விருதுநகரில் கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் என்.வேலப்பன், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராடத்தை மாநில பொதுச் செயலாளர் எ.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில உதவித் தலைவர் ஆர். அருணாச்சலம் பெருமாள், சி.ஐ.டி.யு சங்கத்தின் மாநில செயலாளர் எம்.மகாலட்சுமி, போக்குவரத்து துறை சம்மேளனத்தின் மாநில செயலாளர் ஜி.வேலுச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில், கூட்டுறவு துறை தேர்தலை சுமுகமாக நடத்தவும், அதில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தினப்படியும் வழங்கவும், 480 நாள்கள் வரையில் பணிமுடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வது, அனைத்து கூட்டுறவு துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவும் மற்றும் கூட்டுறவு துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.