முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த் திருவிழா: தீப்பந்தங்களுடன் பக்தர்கள் வழிபாடு

சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் தீப்பந்தங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:01 AM
பகிர்:

சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் தீப்பந்தங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 கொங்கு வேளாள கவுண்டர்களின் குல தெய்வமான இக்கோவிலில் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 24-ம் தேதி சிவகிரி வேலாயுத சுவாமி கோயிலிலிருந்து அம்மன் அழைத்து வரப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீப்பந்தம் பிடிக்கும் திருவிழா வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.

 தேர்த்திருவிழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களிலிருந்து பஸ், வேன் மற்றும் கார்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

 அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த தங்கள் வீடுகளில் இருந்தே தீப்பந்தங்களை தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். இரவு 12 மணிக்கு பொன்காளி  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சன்னதி முன்பாக குதிரை துளுக்குதல் நடைபெற்றது. தொடர்ந்து எடுப்புத்தேர் அலங்கரிக்கப்பட்டு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அப்போது பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மனுக்கு படைக்கலம் எடுத்து வந்தனர். அதிகாலை 3 மணி அளவில் பக்தர்கள் பந்தம் கொளுத்த அறிவிக்கும் வகையில் அதிர் வேட்டுகள் முழங்கியது. அப்போது விழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் தாங்கள் கொண்டு வந்திருந்த தீபந்தங்களை கொளுத்தி, கைகளில் உயர்த்தி பிடித்து குலவை இட்டனர்.

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை பக்தர்களின் தீப்பந்தங்கள் முன்னும் பின்னும்  அணிவகுத்து வர நடுவில் பொன்காளியம்மன் சப்பரத்தில் பவனி வந்த காட்சி பக்தர்களை பரவசமடையச் செய்தது. அம்மன் உற்சவ நிகழ்சிகளை சிவகிரி ஆதினம் சிவசமய பண்டித குரு  சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 மஞ்சள் நீராட்டுவிழா  வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், சனிகிழமை இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் அம்மன் வேலாயுத சுவாமி கோவிலுக்கு புறப்படுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.