மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓட்டுநர் தற்கொலை முயற்சி
பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே குரியமங்கலத்தை சேர்ந்த மாணவி, குள்ளஞ்சாவடி அருகே உள்ள வெங்கடபேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தினமும் வெங்கல்பேட்டையில் இருந்து பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் 6-ம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி வாகனத்தை ஓட்டிய திருக்கோவிலூரைச் சேர்ந்த ராஜு (56) என்பவர், இவரை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநர் ராஜுவை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி முடிந்து வியாழக்கிழமை மாலை வீடு திரும்பிய மாணவியை பின் தொடர்ந்துச் சென்ற ராஜு, வீட்டுக்குள் நுழையும்போது கத்தியால் குத்தியுள்ளார்.
இதைத் தடுக்க முயற்சித்த அவரது பாட்டியையும் கத்தியால் குத்தியுள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்துள்ளனர். இதையடுத்து ராஜு தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீஸôர் தற்கொலைக்கு முயன்ற ராஜுவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி, அவரது பாட்டி ஆகிய இருவரும் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.