முகப்பு
தற்போதைய செய்திகள்

கிலோ அரிசி ரூ.20-க்கு வழங்கும் திட்டம் : விற்பனையை அதிகரிக்க சன்ன ரக அரிசி விநியோகம் தொடக்கம்

வெளிமார்க்கெட்டில் உயர்ந்துவரும் அரிசி விலையை குறைக்க கிலோ 20 ரூபாய்க்கு புதிய சன்னரக அரிசி விற்பனையை தமிழக அரசு துவக்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் காவிரி டெல்டா

Updated On : 6 மே, 2013 at 4:11 PM
பகிர்:

கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட அரிசியின் தரத்தை உயர்த்தி, புதிய சன்னரக அரிசி விற்பனையை தமிழக அரசு துவக்கியுள்ளது.

வெளிமார்க்கெட்டில் உயர்ந்துவரும் அரிசி விலையை குறைக்க கிலோ 20 ரூபாய்க்கு புதிய சன்னரக அரிசி விற்பனையை தமிழக அரசு துவக்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் குறுவை, சம்பா சாகுபடி வெகுவாக குறைந்தது. பெருமாள் ஏரி பாசனம் மற்றும் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளான விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, கடலூரில் ஒரு பகுதியில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.அரசு அறிவித்த சமுதாய நாற்றங்கால் கூட முழுமையாக வெற்றி பெறவில்லை. இவ்விரு போகங்களிலும் நெல் சாகுபடியில் பெரும் சரிவை சந்தித்ததால் மார்க்கெட்டில் நெல் வரத்து குறைந்தது. இதனால் நெல் விலை இரு மடங்காக உயர்ந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு விவசாயிகள் அறுவடை செய்யும் நிலத்திற்கே சென்று வாங்கினர்.

இதனால் மார்க்கெட்டில் அரிசி விலை உயர்ந்தது.  டீலக்ஸ் பொன்னி அரிசி 30 ரூபாயிருந்து 42 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நலன் கருதி அரசு வெளி மார்க்கெட்டில் அரிசி விலையை குறைக்கும் விதமாக கிலோ 20 ரூபாய்க்கு மலிவு விலை அரிசி விற்பனையைத் துவக்கியது.கடலூர் மாவட்டத்தில் அமுதம் அங்காடியின் 3 கடைகள், கூட்டுறவு கடைகளிலும் விற்பனை துவக்கப்பட்டன. இதில் போடப்படும் அரிசி தரமில்லாமல் போனதால் மக்கள் விரும்பி வாங்கவில்லை. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2.5 டன் அரிசி மட்டுமே விற்பனையானது. மேலும் 20 ரூபாய் அரிசி ரேஷன் அரிசியை போன்று தோற்றமளித்ததால் அரிசி விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இது அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement

அதைத்தொடர்ந்து பழைய அரிசிக்கு மாற்றாக புதிய சன்ன ரக அரிசியை கொள்முதல் செய்து விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சன்னரக அரிசி தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது கடலூர் அமுதம் அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் உத்தரவுப்படி சன்னரக அரிசி 4ம் தேதி முதல் விற்பனை துவங்கியுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் படிப்படியாக வருவாய் வட்ட தலைமை இடங்களில்  உள்ள பொதுவிநியோக திட்ட கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.