உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலை. திகழ்கிறது: மாவட்ட ஆட்சியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக லிபரா ஹாலில் ராமசாமி படையாச்சியார், வள்ளலார் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் வரவேற்றார். பதிவாளர்
உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக லிபரா ஹாலில் ராமசாமி படையாச்சியார், வள்ளலார் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் வரவேற்றுப் பேசினார்: பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதுபோன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் தேர்வில் முதல் தேர்விலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை முன்னுதாரணமாக கொண்டு மாணவர்கள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என என.பஞ்சநதம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் பங்கேற்று 128 மாணவ, மாணவியர்களுக்கு அறக்கட்டளை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரம்பரிய மிக்க கட்டடங்களை கொண்டது. அனைத்து வசதிகளையும், சிறந்த கல்வி பயிற்சியுடன் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் நேரடியாக பயிலும் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு சர்வசிக்க்ஷாஅபியான் திட்டம் மூலம் தொடக்கக்கல்வியும், கல்வி உதவித்தொகை, இலவச புத்தகம், இலவச சைக்கிள், சீருடை, காலணி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்நுட்பகல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் ஆகியவற்றை வழங்கி வருகிறது. 18 வருடங்களுக்கு முன்பு நான் படித்தபோது இந்த வசதிகள் எங்களுக்கு கிடையாது. எனவே மாணவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி நன்றாக தகுதிகளையும், திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
விழாவில் பல்கலைக்கழக உதவி நிர்வாக அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியது: தமிழகஅரசால் நான் நியமிக்கப்பட்டு இங்கு பொறுப்பேற்ற பிறகு 16 மணி நேரம் உழைப்பது குறித்து இங்குதான் கற்றுக் கொண்டேன். நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா சிறிய விஷயத்தைக்கூட எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளார். எனது வெற்றிக்கு காரணம் அதிக நேரம் நூலகத்தில் புத்தகங்கள் படித்ததுதான். எனவே மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
விழாவில் உதவி நிர்வாக அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், கிருஸ்துராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். உதவி ஆட்சியர் எல்.சுப்ரமணியம்,தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், வேளாண்புல முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜே.வசந்தகுமார் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பல்கலைக்கழக எஸ்சி., எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.தெய்வசிகாமணி நன்றி கூறினார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராமசாமி படையாச்சியார், வள்ளலார் ஆகியோர் பெயரில் தமிழகஅரசால் 1999-ம் ஆண்டு தலா ரூ.25 லட்சம் வைப்புநிதியாக வழங்கப்பட்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை மூலம் பெறப்படும் வட்டித்தொகை மூலம் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை தொடங்கியதிலிருந்து பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2456 மாணவர்களுக்கு ரூ.73 லட்சத்து, 76 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.