சிதம்பரம் : தம்பதியை தாக்கிவிட்டு நகைகள் கொள்ளை
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் மூவர் வீடு புகுந்து கணவன், மனைவியை தாக்கி பத்தரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் மூவர் வீடு புகுந்து கணவன், மனைவியை தாக்கி பத்தரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் கைமுறிவு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள ஆசிரியர் நகரில் வசிப்பவர் செல்வமுத்து (40). இவர் எலக்டிரீஷியனாக உள்ளார். இவரது மனைவி சித்ரா சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கணவன், மனைவி இருவரும் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் பின்புறம் உள்ள பாலமான் வாய்க்கால் வழியாக வந்த மர்மநபர்கள் மூவர் பின்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து சித்ரா கழுத்திலிருந்து ஐந்தரை பவுன் செயினை பறித்துள்ளனர். சத்தம் கேட்டு கணவர் செல்வமுத்து தடுத்துள்ளார். அப்போது மர்மநபர்கள் உருட்டை கட்டையால் செல்வமுத்துவை தலை மற்றும் கைகளில் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
Advertisement
பின்னர் சித்ரா அணிந்திருந்த பத்தரை பவுன் மதிப்புள்ள செயின், வளையல்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவாயினர். இதில் சித்ராவின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. மர்மநபர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமுற்றும், கைகள் முறிவு ஏற்பட்டு செல்வமுத்து சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.