வலது பக்கத்தில் இதயம் கொண்ட விவசாயிக்கு அரிதான அறுவைச் சிகிச்சை
இதயம், இரப்பை, கணையம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து உள் உறுப்புகளும் இடம் மாறி இருந்த ஏழை விவசாயிக்கு, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மிகுந்த சிரமத்துடன் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்
இதயம், இரப்பை, கணையம், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து உள் உறுப்புகளும் இடம் மாறி இருந்த ஏழை விவசாயிக்கு, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மிகுந்த சிரமத்துடன் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மார்த்தாண்டம்பட்டியைச் சேர்ந்த ஏழை விவசாயி சண்முகம் (58). இவர் படபடப்பு, மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். உதவிக்கு யாரும் இல்லாதநிலையில் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் தனது மகள் வீட்டில் தங்கி இருந்து மருத்துவச் சிகிச்சை பெற சென்னைக்கு வந்தார். குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சண்முகத்தை பரிசோதித்த இதய சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன், அவருக்கு இதய வால்வு சுருங்கி இருப்பதைக் கண்டறிந்தார்.
வலப்புறத்தில் இதயம்: மேலும் இடப்புறம் இருக்க வேண்டிய இதயம் வலப்புறத்திலும், இரப்பை, கணையம் இடதுபுறத்திலும் மாறி அமைந்து இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது. சண்முகத்தின் உள் உறுப்புகள் அனைத்தும் இடம் மாறி இருந்த நிலையில் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வழக்கமாக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை முறையைப் பின்பற்றாமல், புதிய முறை மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சண்முகத்திற்கு மறுவாழ்வு அளித்தனர்.
Advertisement
Advertisement
டாக்டர் எஸ்.பாலச்சந்திரன் இதுகுறித்து கூறியதாவது: உலகெங்கும் சண்முகத்தைப் போன்று சராசரியாக 12 ஆயிரம் பேரில் ஒருவருக்கு உள் உறுப்புகள் இடம் மாறி அமைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற மாறுபட்ட உடலமைப்பைப் பெற்றவர்களுக்கு வெளிநாடுகளில் தனி மருத்துவ அடையாள அட்டை வழங்குவதைப் போன்று இங்கும் வழங்கப்படுவது அவசியம். அதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் உள் உறுப்புகளின் நிலையை அறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றார்.
இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ரங்கராஜன், செங்குட்டுவன், மயக்கவியல் மருத்துவர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.