ரயில்வே பணிமனையில் ஒரு பிரிவை மூட உத்தரவு! 113 பணியாளர்களின் நிலை?
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையில் ஜூன் 1 முதல் வார்ப்பட பிரிவை மூட ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையில் ஜூன் 1 முதல் வார்ப்பட பிரிவை மூட ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அப்பிரிவில் பணியாற்றும் 113 பேரின் நிலை என்ன என்பது குறித்து ரயில்வே தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இப்பணிமனை கடந்த 150 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிய நிலையில், இப்போது 900 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இப்பணிமனைக்கு ரயில்வே நிர்வாகம் பணிகளை வழங்காததால், பணியாளர்கள் பணியின்றி இருக்கும் நிலை இருந்து வருகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் அண்மையில் பணிமனைக்கு வந்திருந்தபோது, இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை தொழிலாளர்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இப்பணிமனையின் முக்கிய பிரிவான வார்ப்பட பிரிவை மூடுமாறு புதுதில்லியில் உள்ள ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது இப்பிரிவில் 2 கண்காணிப்பாளர்கள், ஒரு இளநிலைப் பொறியாளர், 110 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வேறு பிரிவுக்கு செல்ல
விருப்பமா என நோட்டீஸ்
இதுகுறித்து இப்பிரிவில் உள்ள ஊழியர்களிடம் தெரிவித்துள்ள பணிமனை நிர்வாகம் ஜூன் 1ஆம் தேதி முதல் வேறு பிரிவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுங்கள் என கேட்டுள்ளது. இதில், 18 பேர் மே 31ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில் மற்ற தொழிலாளர்கள் தங்களின் நிலை புரியாமல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வார்ப்பட பிரிவில்தான் இதுநாள்வரை பொத்தானை அமுக்குதல் மூலம் தானே தூக்கும் ரயில்வே கேட்டுகள், கிராசிங் தண்டவாளங்கள், மர சீலிப்பர்களுக்கான பொருத்தும் கிளிப்புகள் உள்ளிட்ட பல கருவிகள் உருவாக்கப்பட்டு வந்தன.
25 ஆண்டுகளுக்கு முன்
தினமும் 25 டன் உற்பத்தி!
1985-1990-க்கு இடைபட்ட ஆண்டுகளில் தினமும் 25 டன் எடையுள்ள பணிகளை செய்து வந்த வார்ப்பட பிரிவில், இப்போது மாதம் 25 டன் செய்யும் நிலை காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு பணிகளை பெற்றுத்தர நிர்வாகத்துக்கு பல முறை இந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ரயில்வேயில் இப்பணிகள் ஒப்பந்ததாரர்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பிரிவுகளில்
பணிகள் இல்லை!
இந்தப் பணிமனையில் உள்ள மற்ற பிரிவுகளான இயந்திரப் பிரிவு, கருமார் பட்டறைப் பிரிவு, வெல்டிங் பிரிவு, மில்ரைட் பிரிவு, சிக்னல் பிட்டர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் இப்போது பணிகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
முக்கிய ரயில்வே பாலங்களான ராமேஸ்வரம் பாம்பன் பாலம், கொங்கண் ரயில்வே பாலம் ஆகியன அரக்கோணம் பணிமனையில்தான் தயாரிக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.
பணிமனை மூடப்படும் அபாயம்?
இந்நிலையில் இவ்வளவு பெரிய பணிகளை செய்து வந்த இந்தப் பணிமனை இப்போது மூடப்படும் நோக்கில் முதலாவதாக வார்ப்பட பிரிவுக்கு இந்த அறிவிப்பு வந்துள்ளதோ என பணிமனை பணியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அனுபவம் உள்ள தொழிலாளர்கள், சிறப்பான கருவிகளுடன் தொழிற்சாலை, இங்கு உருவாக்கப்படும் தயாரிப்புகளுக்கு இன்றும் இருக்கும் அதிகப்படியான தேவைகள் ஆகியன முறையாக இருந்தும் ஒரு தொழிற்சாலையை நடத்த முடியாமல் மூடும் நிலைக்கு ரயில்வே நிர்வாகம் சென்றது ஏன் என மேலிடக்குழு நியமித்து ஆராய்ந்து தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
"மத்திய அமைச்சரை சந்திப்போம்'
இதுகுறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொறியியல் தொழிற்சாலையின் கிளைச் செயலர் சி.ஜானகிராமன் கூறுகையில், அதிவேகமாக ஓடக்கூடிய ரயில்கள் செல்லும் தண்டவாள இணைப்புகளைத் தயாரிக்கும் இப்பணிமனை பணிகளை தனியாருக்கு அளிக்கக்கூடிய விதத்தில் இந்தப் பணிமனையின் முக்கிய பிரிவை மூட உத்தரவிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை யூனியன் பொதுச்செயலர் கண்ணையா சந்திக்க உள்ளார் என்றார்.