அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் : தருமபுரி மாவட்ட நிர்வாகம்
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசினை தவிர்த்திட வேண்டும்.
அதேபோல, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் வான வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதைத் தவிரக்கவும். குழந்தைகளைத் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல், பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது.
மீறி வெடிப்பவரகள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும், சிறைத் தண்டனையும் வழங்கப்படும். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாசற்ற, ஆபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.