முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஜன.21 முதல் கள் இட்லி விற்பனை : தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜன.21-ம் தேதி முதல் கள் இட்லி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM
பகிர்:

தமிழகத்தில் ஜன.21-ம் தேதி முதல் கள் இட்லி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:  கர்நாடக மாநிலத்தில் இட்லி, தோசை மாவைப் புளிக்க வைப்பதற்காகக் கள்ளைப் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, தெற்கு கர்நாடகத்தில் மங்களூர் போன்ற இடங்களில், கள்ளை ஊற்றிப் புளிக்க வைத்து சுடப்பட்ட இட்லி பிரசித்தி பெற்றது. “கள் இட்லி” என்றே இதை அழைக்கின்றனர்.

 இம்மாவைக் கொண்டு தோசை, ஊத்தாப்பம், பனியாரம் போன்றவற்றையும் தயாரிக்கின்றனர். இந்த உணவு, சுவை, மனம், குணம் கொண்டதாக இருக்கும். இயற்கையான கள்ளை வைத்துப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த உணவு, உடல் நலத்துக்கு ஏற்றதாகும்.

 நாம் வாழும் இந்தக் காலத்தில், மருந்து-மாத்திரைகளை உள்கொள்வது கூடிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, ‘ஆண்ட்டிபயாடிக்’ பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்தும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் விடுபட, கூடுதலான மோரைக் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கள்ளும் மோரும் ஏறத்தாழ ஒன்றே ஆகும். மோரில் இருப்பதைப் போல் கள்ளிலும் ஆல்கஹால் உள்ளது.

 உலக அளவில் தமிழகத்தில் மட்டும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது. கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்ற அடிப்படையில் வரும் ஜன.21 முதல் தமிழகம் எங்கும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும்.

 இந்த தேதி முதல் தமிழகத்தில் கர்நாடகத்தைபோல கள் இட்லி, கள் தோசை, கள் ஊத்தாப்பம், கள் பனியாரம், கள் ஆப்பம் ஆகியவற்றைத் தயாரித்து உண்பதற்கான வாய்ப்பு, பொதுமக்களுக்குக் கிடைக்கும். இயற்கையான இத்தகைய தயாரிப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.