டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடச் சென்ற பெண்கள்: துணை வட்டாட்சியரை சிறைபிடித்தனர்
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலத்தில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டுவதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால்
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலத்தில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டுவதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சென்ற துணை வட்டாட்சியரை சிறைபிடித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சாலையோரத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் குடிமகன்கள் தொல்லையினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த அக்.21-ம் தேதி நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், வீராணநல்லூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்க்கு வந்த வட்டாட்சியர் வெங்கடாசலம் 15 தினங்களுக்குள் கடையை அகற்றுவதாக எழுதி கொடுத்தார்.
15 தினங்கள் ஆகியும் டாஸ்மாக் மதுபானக்கடை அகற்றப்படாததால் வியாழக்கிழமை நாட்டார் மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாமணிரத்தினம் தலைமையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை பூட்ட முயன்றனர். சம்பவ இடத்திற்கு காட்டுமன்னார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சென்று அவர்களை தடுத்தி நிறுத்தினார். கடையை அகற்றுவதாக கூறிய வட்டாட்சியர் இங்கு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பின்னர் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியனை அனுப்பி வைத்தார். வட்டாட்சியர் வராததால், துணை வட்டாட்சியர் வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பின்னர் போலீஸார் உதவியுடன் துணை வட்டாட்சியர் பொதுமக்களிடமிருந்து தப்பித்து வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் மேலும் போராட்டம் தீவிரமடைந்தது. பின்னர் அங்கு வந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி செல்போன் மூலம் உதவிஆட்சியர் எம்.அரவிந்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விரைவில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உதவிஆட்சியர் தெரிவித்த தகவலை பொதுமக்களிடம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பிரகாஷ், வட்டார காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன், மணிமொழி, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.