முகப்பு
தற்போதைய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு நிலையால் 12 மணி நேரம் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடந்ததால் கடலூர் மாவட்டத்தில் 12 மணி நேரம் தொடந்து மழை பெய்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மழை, காற்றினால் வேறு எந்த

Updated On : 16 நவம்பர், 2013 at 8:34 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:18 AM

காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடந்ததால் கடலூர் மாவட்டத்தில் 12 மணி நேரம் தொடந்து மழை பெய்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மழை, காற்றினால் வேறு எந்த பாதிப்பும் இல்லை.

வங்க கடலில் உருவாகி கடந்த 4 நாட்களாக நீடித்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை அருகே சனிக்கிழமை அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடங்கி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.

சனிக்கிழமை காலையில் காற்றின் வேகம் அதிகரித்தது. கடலூர் துறைமுக பகுதியில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கடல் அலைகள் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்டது.5 அடி உயரம் வரை அலைகள் எழும்பின.   தொடர்மழையால் கடலூரில் காலையில் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

Advertisement

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, நெல்லிக்குப்பம் வடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடலூர் நகரில் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆட்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பிறகு கடலூர் நகரில் வெயில் அடிக்க தொடங்கியது. இதன்பிறகே சாலைகளில் மக்கள் நடமாட்டம் தெரிந்தது.

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடலூர் மாவட்ட மழையளவு விவரம்(மி.மீ). அண்ணாமலைநகர் 86.80, பரங்கிப்பேட்டை 53, கடலூர், 37.60, சிதம்பரம் 37, குப்பநத்தம் 35.40, கொத்தாவாச்சேரி, வானமாதேவி 27, புவனகிரி 24, லால்பேட்டை 23, மே.மாத்தூர் 18, ஸ்ரீமுஷ்ணம், பெலாந்துறை, கீழச்செருவாய், குப்பநத்தம் 15, லக்கூர் 13.30, காட்டுமன்னார்கோயில், தொழுதூர் 13, பண்ருட்டி 11.30, காட்டுமயிலூர் 7, வேப்பூர் 5 மி.மீ என மொத்தம் 540.60 மி.மீ அளவு மழை பதிவாகி இருந்தது.

விலகாத புயல் அச்சம்

சுனாமி, தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பலர் உறவுகளையும், உடமைகளையும் இழந்தனர்.  காலத்தால் அழியாத வடுக்களை தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், புயல் என்றாலே அச்சம் கொள்ளும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடலூர்- நாகை இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், கடந்த இரண்டு நாட்களாக அச்சத்தில் உறைந்திருந்த, கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் சனிக்கிழமை மதியத்திற்கு பிறகு நிம்மதியடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.