முகப்பு
தற்போதைய செய்திகள்

தாக்குவதாக கூறி பள்ளிக்கு செல்லாமல் மறியலில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு

பள்ளிக்கு செல்லும் தங்களை தாக்குவதாக கூறி சிதம்பரம் அருகே உள்ள மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திங்கள்கிழமை திடீர் மறியலில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

பள்ளிக்கு செல்லும் தங்களை தாக்குவதாக கூறி சிதம்பரம் அருகே உள்ள மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திங்கள்கிழமை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அருகே உள்ள மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அல்லாத சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் திங்கள்கிழமை மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் பள்ளிக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கு செல்லாமல் தங்களது கிராமத்தின் முகப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன் (புவனகிரி), அகிலன் (மருதூர்) மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இரு தினங்களில் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு மதியம் பள்ளிக்கு சென்றனர்.

மாணவர்கள் வெளியாட்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அறிவழகன் என்பவரே காரணம் என மாணவர்கள் தெரிவித்தனர். டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பள்ளிக்கு சென்ற மேற்கண்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பள்ளி வளாகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.