முகப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளை வேன் பச்சை வேன் ஆனது: பீதியில் இலங்கைத் தமிழர்கள்

வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் வீடு திரும்பாத நிலையில் புதிதாக 'பச்சை வேன் கடத்தல்' இன்னும் எத்தனை ஆயிரம் பேர்களை இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து காணாமல் போகச் செய்யுமோ என்ற பீதி இலங்கையில் உள்ள தமிழர்களிடையே எழுந்துள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2013 at 4:02 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 PM

முல்லைத்தீவில் தொடரும் கடத்தல் சம்பவங்களால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்

இலங்கையின் வட பகுதியில் உள்ள முல்லைத் தீவில் பச்சைநிற வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் பாடசாலைச் சிறுவன் ஒருவனும் பெண் ஒருவரும் கடத்தப்பட்டார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கடத்தப்பட்ட இந்த இரண்டு பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Advertisement

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடந்த 30 ஆம் தேதி பச்சை நிற வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் ஜெகநாதன் கவிஞன் என்ற சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு 6 மணியளவில் கொக்கிளாய் கருநாட்டுக் கேணிப் பகுதியில் இவர் வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். அப்போது அந்த தெருவில் வந்த ஒருவரால்  மீட்கப்பட்டு சிறுவன் கவிஞன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாதவர்களால் சிறுவன் கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது அந்த வாகனத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி அடைக்கப்பட்டு உள்ளே இருந்ததாகவும் அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்

இதேபோன்று வற்றாப்பளை பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவரும் அன்றையதினம் பச்சை நிற வேனில் கடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான சுபாஷினி என்ற பெண்தான் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இந்தச் சிறுவனிடம் பல்வேறு தரப்பினர்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாகவும் தெரிய வருகிறது

இதேவேளை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் வீடு திரும்பாத நிலையில் புதிதாக 'பச்சை வேன் கடத்தல்' இன்னும் எத்தனை ஆயிரம் பேர்களை இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து காணாமல் போகச் செய்யுமோ என்ற பீதி இலங்கையில் உள்ள தமிழர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.