வாந்தி காய்ச்சல் 114 மாணவ- மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி: விடுதி மூடல்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியார் பள்ளி விடுதியில் உணவு உண்ட மாணவ- மாணவிகள் 103 பேர், விடுதி ஊழியர்கள் 11 பேர் என 114 பேருக்கு வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டதால் லால்குடி அரசு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியார் பள்ளி விடுதியில் உணவு உண்ட மாணவ- மாணவிகள் 103 பேர், விடுதி ஊழியர்கள் 11 பேர் என 114 பேருக்கு வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டதால் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர்,டி.பி பூனாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ரெத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள செம்பரை, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை யேசு மேனிலைப் பள்ளி. இப் பள்ளியில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு புளிக்குழம்புடன் கூடிய உணவை உண்டுள்ளனர் மாணவ- மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள். அன்று இரவு ஒரு சில மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் ஊசி போட்டும், மாத்திரகளை வழங்கியுள்ளனர்.
இருப்பினும் வாந்தி, காய்ச்சல் பாதிப்பு பிற மாணவ- மாணவிகளுக்கு ஏற்படவும், அருகில் உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். இச் சம்பவம் லால்குடி வருவாய் சார் ஆட்சியர், டாக்டர் ஜெயேந்திரபானு ரெட்டிக்கு தெரிய வரவும், 103 மாணவ- மாணவிகள், 11 விடுதி ஊழியர்கள் என அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர் இது குறித்து திருச்சி மாவட்ட இணை இயக்குநர் (மருந்தகம் மற்றும் ஊரக நலப்ணிகள்) டாக்டர் அல்லி மனோகர், துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் சேரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அவர்கள் லால்குடி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
டாக்டர் அல்லிமனோகர் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சம்சாத்பேகம் (ஸ்ரீரங்கம்),டாக்டர் சந்திரா(மண்ணச்சநல்லூர்)மற்றும் லால்குடி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர். இச் சம்பவம் தொடர்பாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் டி.பி.பூனாட்சி, மாவட்டச் செயலரும் எம்பியுமான ரத்தினவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் டி.ராமு(பொறுப்பு), லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இது குறித்து லால்குடி சார் ஆட்சியர் ஜெயேந்திரபானு ரெட்டி தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
சம்பவம் தொடர்பாக இணை இயக்குநர், துணை இயக்குநருக்கு தகவல் கொடுத்து துரிதமாக சிகிச்சை அளிக்கவும், விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும், உணவுகளை பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் பிரச்சினைக்குறிய இப் பள்ளியில் இது போன்ற சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளதாகவும், தற்போது பள்ளி விடுதியினை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.