விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு தொழில் திட்டங்களுக்கு கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாடு, தொழில் முனைவோர், பயணியர் வாகனம் பராமரிப்பு கூடம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல்நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தொழில் செய்வதற்கான கடனுதவி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு 50 சதவீதம் வரையில் மானியமும் விடுவிக்கப்பட இருக்கிறது.
எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பம் செய்து பயனடையலாம். இவர்களுக்கு 1.7.2013 அன்றைய நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமான அதிக பட்சம் ரூ.1 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இதில், தொழில் முனைவோர் திட்டத்தில் நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் மருத்துவர், பல் மருத்துவர், முடநீக்கும் மையம், கண்கண்ணாடியகம், ரத்த பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல், லாரி மற்றும் வாகனம் வாங்க கடனுதவி பெற கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புகிறவர்கள் விருதுநகர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலர் அலுவலகத்தை அணுகி விலையில்லாமல் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும், இத்துடன் குடும்ப அட்டை நகல், இருப்பிட சான்று, கோட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்ட சாதி சான்று மற்றும் தொழில் தொடங்குவதற்கான முன்மாதிரி திட்ட அறிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே தொழில் முனைவோராக விரும்புகிறவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவி பெற்று தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் இளைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.