முகப்பு
தற்போதைய செய்திகள்

தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் - வேளாண் துறை அமைச்சர் கோரிக்கை

வருடந்தோறும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மாநில வேளாண் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன் வலியுறுத்திப் பேசினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

வருடந்தோறும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மாநில வேளாண் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன் வலியுறுத்திப் பேசினார்.

சிவகங்கை மாவட்டம், கொட்டக்குடியில் வாசனை நறுமணப் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது.

 விளையாட்டில் தடைகளைத் தாண்டி ஓடும் ஓட்டத்தைப் போல விவசாயிகள் வறட்சி, வெள்ளம், புயல் என பல்வேறு  இயற்கை இடப்பாடுகளை ஆண்டுதோறும் சந்திக்கிறோம். இதேபோல் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளமையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

Advertisement

     மாநிலத்தில் சுமார் 1.72 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் அந்நிய செலவாணியை ஈட்டித் தரக்கூடிய வாசனை மற்றும் நறுமணப் பயிர்களைப் பயிரிட்டு 4.8 லட்சம் மெட்ரிக் டன் விளைவிக்கப்படுகிறது. பல்வேறு உயர்தொழில் நுட்பத்துடன் கூடிய விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் போது விவசாயத்தில் இருமடங்கு உற்பத்தி 3 மடங்கு வருவாய் பெறமுடியும்.

  மாநிலத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் விவசாய விளை பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில் மதுரையில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சந்தை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.127 கோடி ஒதுக்கப்பட்டு 88 நவீன கிட்டங்கிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.22.38 கோடி நிதி ஒதுக்கீடும், காய்கறி, பழம், புளி, மிளகாய், எலுமிச்சை, திராட்சை, வாழை போன்ற விளைபொருள்களுக்காக வணிக வளாகம், குளிர்சாதன வசதிகள் தெரிவு செய்யப்படாத மாவட்டங்களில் உருவாக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  சந்தை உள்கட்டமைப்பு வசதி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கணினிமயமாக்குவதற்காகவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 22.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உணவுபதப்படுத்துதலை ஊக்குவிக்கும் வகையில் தேசிய உணவு பதப்படுத்துதல் இயக்கத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய ரூ.10.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் 100 சதவீத மானியம் நுண்ணுயிர் பாசனத் திட்டத்திற்காக மாநில அரசு ஒதுக்கி உள்ளது.

 விவசாய இடுபொருள் விலையைக் குறைக்கும் வகையில் 4 சதவீத வாட் வரி விலக்கு அளித்துள்ளது. விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தை தவிர்க்கும் வகையில் வேளாண் துறைக்கு மட்டும் ரூ.1359.6 கோடியை வறட்சி நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

  விவசாய சிறப்புத் திட்டங்கள் மூலம் கடந்த 2011-12 ஆண்டில் தமிழகத்தில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக மத்திய அரசு விருதும், நடப்பாணடில் விவசாயத்தில் தலைமை பண்பு கொண்ட மாநிலமாக தேசிய சாதனை விருதும் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

 வருடந்தோறும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு  ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திற்கு இயற்கை இடர்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் போதிய நிதியை மத்திய நிதி அமைச்சர் வழங்க வேண்டும். பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இதுபோன்ற ஏற்றுமதி பூங்காக்கள் தமிழகத்தில் அமைத்திட மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments