அமெரிக்க கப்பலில் இருந்த 3 மாலுமிகளை காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீஸார் மனு
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேரில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 3 மாலுமிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கியூ பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில்
அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேரில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 3 மாலுமிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கியூ பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை (அக்டோபர் 23) நடைபெறுகிறது.
இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்காவின் அட்வன்போர்ட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சீ மேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவினர் கடந்த 12-ம் தேதி சுற்றிவளைத்து துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.ஆயுதங்களுடன் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தது, மீனவர்களிடம் 1500 லிட்டர் டீசல் வாங்கியது என்ற குற்றங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கப்பலில் இருந்த 35 பேரும் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், கப்பலில் இருந்த 35 அதிநவீன ரக துப்பாக்கிகளும் பரிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான 35 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரிடம் மீண்டும் விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, தூத்துக்குடி குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 2 -ல் நடைபெற்று வந்த இந்த வழக்கு எண் 1-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கப்பலின் பாதுகாப்பு அதிகாரியான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் டேவிட் டென்ப் டவர் (50), மாலுமிகளான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த லலித்குமர் குராங் (40), உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ராதேஸ்வர் திவேதி (39) ஆகிய மூவரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸார் குற்றவியல் நீதித் துறை நடுவர் (எண்.1) மன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இதற்காக, மூவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய குற்றவியல் நீதித் துறை நடுவர் சி. கதிரவன் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதையெடுத்து, மூவரும் பாளைங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்படுமா? எத்தனை நாள்கள் அனுமதி கிடைக்கும்? என்ற விவரம் புதன்கிழமை பிற்பகலில் தெரிய வரும். இதற்கிடையே கப்பலுக்கு டீசல் வழங்கியதாக கைதான 5 பேர் தரப்பிலும் ஜாமீன் கேட்டு குற்றவியல் நீதித் துறை நடுவர் (எண்.1) மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது.