நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!
ஆணையாளர் பணியிடம் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மூவேந்தர்
ஆணையாளர் பணியிடம் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நகரமன்றக் கூட்டம் முடிந்தவுடன் சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் நகரமன்ற உறுப்பினர்களையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், ஆணையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் திமுக நகரமன்ற உறுப்பினர்களின் கொறடா த.ஜேம்ஸ்விஜயராகவன் தலைமையில் உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் ஆ.ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் பெரு.திருவரசு, மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நகராட்சியில் ரூ.74 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை திட்டம், ரூ இரண்டரை கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த உள்ளது. இவ்வேளையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆணையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் நகரமன்ற உறுப்பினர்களையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் தரக்குறைவாக பேசும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேம்ஸ்விஜயராகவன் நகரமன்றத் தலைவரிடம் வலியுறுத்தினார்.