முகப்பு
தற்போதைய செய்திகள்

பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை கேட்டு கோயில் தர்மகர்த்தா கடத்தல்: ஒருவர் கைது

காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:29 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார். ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று கும்பாபிஷேகம் செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.

இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →