டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது: தா. பாண்டியன் கண்டனம்
தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம்
தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்லூரி நிர்வாகம் செய்த முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த நூற்றுக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.படிப்பைத் தொடர வாய்ப்பு கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 17 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை போலீஸார் இன்று (செப். 6) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகளும், இந்திய மருத்துவ கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement