ஓமனில் நெல்லைத் தொழிலாளி மர்மச் சாவு: சடலத்தைப் பெற குடும்பத்தினர் தவிப்பு
ஓமன் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லையைச் சேர்ந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டுத்தரக் கோரியும், மரணத்துக்கான உண்மையையும் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியும் அவரது குடும்பத்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டத்துக்குள்பட்ட வடக்கு குருவிகுளம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் பூமாரி (30). இவரது கணவர் அந்தோனிசாமி (34). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), மனோரஞ்சனி (8) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
தினக் கூலி வேலைக்கு சென்று வந்த அந்தோனிசாமி இரு ஆண்டுகளுக்கு முன் ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள அஜய்பா என்ற இடத்தில் இயங்கும் காற்றாலை நிறுவனத்துக்கு கூலி வேலைக்குச் சென்றார். சவுதி நேஷனல் ஒப்பந்த நிறுவனம் என்ற பெயரில் இயங்கிய அந்த நிறுவனத்தில் சமையலராக பணிக்கு சேர்ந்தார்.
நாள்தோறும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். அந்தோணிசாமி மாரடைப்பால் செப்.5ஆம் தேதி இறந்துவிட்டதாகவும், அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யாமல் வைத்திருப்பதாக வடக்கு குருவிகுளத்தைச் சேர்ந்த மற்றொரு ஊழியரின் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாம்.
தனது கணவர் சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும். சடலத்தை மீட்டு திருநெல்வேலிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூமாரி தனது மாமியார் பூங்கனி மற்றும் கணவர் வீட்டு உறவினர்களுடன் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.