தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு: ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் வெங்கடேச பண்ணையார் நினைவு நாள் வியாழக்கிழமை (செப்டம்பர் 26)கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளுரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பல்வேறு பிரிவினர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.வெளி மாவட்டம் மற்றும் உள்ளுரில் இருந்து அம்மன்புரம் கிராமத்திற்கு பல்வேறு பிரிவுகளை சார்ந்த அமைப்பினர் அழைத்துவரும் வாகனங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையின்படியும் வழக்கமாக செல்லும் பஸ்கள், சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், உள்ளுர் பள்ளிக்கூடம், கல்லூரி வாகனங்கள், வாடிக்கையாக வந்து செல்லும் பஸ்கள், மற்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த வாகனங்களை தவிர அம்மன்புரம் கிராமத்துக்கு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அமைப்பினர் ஏற்றி வரும் இதர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் உரிமைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு 8 மணி வரை நடைமுறையில் இருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.