பண்ருட்டி : வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க குடோனில் நெல் மூட்டைகள் மாயம்?
பண்ருட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பண்ருட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பண்ருட்டியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு நெல், மணிலா, முந்திரி ஆகியவற்றை ஈடாக வைத்துக் கொண்டு தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பண்ருட்டியில் சங்க அலுவலகத்திலேயே 2 குடோனும், கருங்குழி உள்ளிட்ட 4 இடங்களில் தனியாருக்கு சொந்தமான குடோன்களும் உள்ளன.
இதில், வடலூர் அருகே கருங்குழியில் உள்ள குடோனில், 12 விவசாயிகள் சுமார் 3000 நெல் மூட்டையை ஈடாக வைத்திருந்தார்களாம்.
குடோன்களில் நேற்று முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சோதனை செய்து பார்த்த போது கருங்குழி குடோனில் வெறும் 250 மூட்டைகள் மட்டும் இருப்பதாகவும், 2750 மூட்டைகள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இதன் மதிப்பு ரூ.22 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு உறுதியான தகவல்கள் தெரிய வரும்.