மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நிலையான ஆட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நிலையான ஆட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்புவை ஆதரித்து சனிக்கிழமை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் பஜார் திடலில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு வாக்குசேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:
சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. 2004, 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு சோனியா முற்றுப்புள்ளி வைத்தார். 16 ஆவது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலிலும் மக்கள் மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும்.
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளே ஏற்க தயாராகவில்லை.மதசார்பின்மை குறித்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மக்களை குழப்புகின்றன. மத்தியில் நிலையான மதசார்பற்ற ஆட்சி அமைந்திட மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
மேலப்பாளையத்தில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் துணைத் தலைவர் முகம்மது அலி வீட்டுக்கு சென்று மத்திய அமைச்சர் வாசன், அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்தார். பிரசாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன், மாநகர் மாவட்டத் தலைவர் கே. ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், தேசிய கப்பல்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் அ. அமீர்கான், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.பி. துரை, தூத்துக்குடி துறைமுக ஆலோசனைக்குழு உறுப்பினர் சுத்தமல்லி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.