நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 தினங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 பேரவைத் தொகுதிகளில் 2707 வாக்குச்சாவடிகளில் பணி செய்ய 13,251 பேர் வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு இயந்திரத்தை கையாளுதல், படிவம் 12, படிவம் 12 ஏ ஆகியவற்றை நிரப்புதல், வாக்குப்பதிவு நிலவரத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் வைத்து இப்பயிற்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் க. சீனிவாசன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். உதவி தேர்தல் அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான அர. லட்சுமி பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
பயிற்சியின்போது, வருகை தேர்தல் பார்வையாளர் மனோஜ்குமார் தேர்தல் பணிகள் குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். உதவி தேர்தல் அலுவலர் ஆ. பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.