திமுக ஆட்சிக்காலத்தில் களக்காட்டில் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் கட்டப்பட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரத்தை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு களக்காடு அண்ணாசிலை அருகே கனிமொழி பேசியதாவது:-
அதிமுக ஆட்சியில் பஸ் கட்டணம், பால் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் தொழிற்சாலைகள் முடங்கிப் போய் உள்ளன. ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. திமுக ஆட்சிக்காலத்தின்தான் களக்காட்டில் வடக்கு பச்சையாறு அணை, கொடுமுடியாறு அணை கட்டப்பட்டது. தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் தாமிரவருணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
களக்காட்டிலிருந்து வள்ளியூர், நான்குனேரி, சேரன்மகாதேவி செல்லும் சாலைகள் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. ரூ.70 லட்சம் செலவில் புதிய பஸ் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. நம்பியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. களக்காட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாகன நிறுத்தத்தை திறந்து வைத்தேன். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வாழைத்தார் சந்தை அமைக்கும் பணிகள் ஆட்சி மாற்றத்தால் முடங்கிப் போய் விட்டது. அதிமுக ஆட்சியில் சூறைக்காறறில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் விவசாயக் கடனுக்கான வட்டி செலுத்தாத விவசாயிகளுக்குக் கூட வங்கிகளில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.