நெல்லை இடிந்தகரை மீனவர்கள் மீது தாக்குதல்: ஆட்சியரிடம் புகார்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் இருவரை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தாக்கியதாக ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் இருவரை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தாக்கியதாக ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
ராதாபுரம் வட்டம், இடிந்தகரை சுனாமிகாலனியை சேர்ந்தவர்கள் நாட்டுபடகில் சென்று கடலில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, படகுக்கு உரிய பதிவு சான்று உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.இடிந்தகரை சுனாமி காலனியை சேர்ந்த 13 பேர் 2 நாட்டு படகில் புதன்கிழமை வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்க சென்றனராம். படகில் சென்ற மீனவர்களை இடிந்தகரையில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் வழிமறித்து அவர்களிடம் இருந்த மீன், மற்றும் நண்டுகளை பறித்து கொண்டனராம். மேலும் தொம்மை (42), ரோசாரி (40) ஆகிய இருவரை தாக்கிய கடலோரப் பாதுகாப்பு படையினர் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனராம்.
இது குறித்து ஆட்சியரிடம் இடிந்தகரை ஊர் கமிட்டி சார்பில் புகார் மனு அளித்தனர். திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு செயலர் ராம் கூறியதாவது: இடிந்தகரை பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பல வருடங்களாக கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை வழக்கம்போல் 2 நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றவர்களை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் வழிமறித்து இருவரை தாக்கியுள்ளனர்.
இலங்கை ராணுவனத்தினரால், தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சொந்த நாட்டில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் தாக்கிய சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.