கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்கெட் கடைகளுக்குள், வெள்ளிக்கிழமை திடீரென சாக்கடை நீர் புகுந்தது. 10 கடைகளுக்குள் சாக்கடை நீர் புகுந்ததால் கடையில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்தன.
கடலூர் பான்பரி மார்கெட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை, வாழைப் பழங்கள், பூ விற்பனை, மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளும் இங்கு உள்ளன.மார்க்கெட் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர், தனி வாய்க்கால் வழியாக, ரயில்வே தண்டவாளங்களுக்கு கீழ் உள்ள பாலம் வழியாக, பிரதான வடிகாலுடன் இணைக்கப்பட்டு இருந்தது.ஆனால் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தப் பாலம் வேறு இடத்தில் கட்டப்பட்டு விட்டதாகவும், இதனால் பான்பரி மார்க்கெட் பகுதியில் உள்ள கழவுநீர் பிரதான வாய்க்காலுக்குச் செல்ல முடியாமல், தடைபட்டுவிட்டதாக பான்பரி மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அடிக்கடி இந்த மார்க்கெட்டில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி, அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து விடும் அவலம் நிலவுகிறது. மார்கெட்டின் பிரதான நுழைவாயில் பகுதியில் 2 அடி உயரத்துக்கு சாக்கடை நீர் தேங்கி, பொதுமக்கள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதுடன், 10 கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்து விட்டது. இதனால் கடைகளில் இருந்த அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் சேதம் அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த மார்க்கெட்டின் அருகில் குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டி நிரம்பி வழியும் போதும், சுத்தம் செய்யும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரும் பான்பரி மார்க்கெட், கழிவுநீர் வாய்க்காலுடன் சேர்ந்து, பாதிப்பை அதிகரிப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.