முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீர்த் தட்டுப்பாடு : ஈரோட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டம்

கோடையின் கடுமையான தாக்கம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

கோடையின் கடுமையான தாக்கம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 80 சதவீத உள்ளாட்சி அமைப்புகள் காவிரி ஆற்றையும், 20 சதவீத உள்ளாட்சி அமைப்புகள் பவானி ஆற்றையும் குடி நீருக்காக நம்பி உள்ளன.

ஆனால் கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால் காவிரி, பவானி இரண்டு ஆறுகளும் வறண்டு வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து அவ்வப்போது குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதே போல பவானிசாகர் அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது.

கோடை தாக்கத்தால் தண்ணீர் தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு முழுமையாக குடிதண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

 உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சோ.மதுமதி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சுமதி, மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி மற்றும் பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி உள்ளிட்ட நகராட்சிகளின் ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் நிலை மையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.