முகப்பு
தற்போதைய செய்திகள்

நியாயவிலைக்கடை பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும்: கு.பாலசுப்பிரமணியன்

நியாயவிலைக்கடை பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு, அதில் உள்ள குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அரசு பணியாளர்கள் மகா சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

நியாயவிலைக்கடை பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு, அதில் உள்ள குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அரசு பணியாளர்கள் மகா சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தது:

பொதுவிநியோக திட்டத்தில் உள்ள குறைகளை போக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருகள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த பொருள்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்லும் போது சரியான எடையில் இருப்பதில்லை. இந்த நிலையை போக்க அத்தியாவசிய பொருள்களை நியாயவிலை கடையிலேயே எடையிட்டு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அட்டைகள்: தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 10 சதவீதம் போலி அட்டைகள் உள்ளன என தெரிகிறது. போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொண்டு, நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களை 60 முதல் 80 சதவீதம்தான் என குறைத்து வழங்கப்படுகிறது. பொருள்கள் வழங்கும் போதை குறைவாக வழங்கிவிட்டு, இருப்பு குறைகிறது என பணியாளர்கள் தண்டிக்கப்படும் நிலை உள்ளது. இந்த குறைவு அனைத்தும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் சுமக்க வேண்டியது உள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் தணிக்கை செய்யும் போது பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

டிஜிட்டல் குடும்ப அட்டை: 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் விழித்திரை மற்றும் விரல்ரேகை அடிப்படையிலும் டிஜிட்டல் குடும்ப அட்டை வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் 3 ஆண்டுகளாகியும் இன்றும் வழங்கப்படவில்லை. 2010 ஆண்டோடு ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டை காலாவதியாகிவிட்டது. அதன் பின்னர் ஆண்டு தோறும் உள்தாள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவில் ஒருநாள் அரசு விடுமுறை விடப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதுபோன்று தமிழகஅரசு ஒருநாள் அரசு விடுமுறை விட்டு விழித்திரை மற்றும் விரல்ரேகை அடிப்படையில் பதிவு செய்து டிஜிட்டல் குடும்ப அட்டை வழங்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆதார் அட்டை மூலம் ரேஷன் வழங்க தமிழகஅரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதில் குறைபாடுகள் உள்ளதால், நலத்திட்ட உதவிகளுக்கு அந்த அட்டையை பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணினி மயமாக்க வேண்டும்: தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக்கடைகள் உள்ளது. இதில் 31 ஆயிரம் கடைகள் கூட்டுறவுத்துறை பணியாளர்களும், 2 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். நுகர்பொருள் வாணிபக்கழக கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். நூறு சதவீத கணினி மயமாக்கி, பொருள்களை பாக்கெட் மூலம் வழங்க வேண்டும்.

செப்.5-ல் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: தஞ்சை மாவட்டம் துறையுன்டார்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் மூலம் ரூ.81 லட்சம் அச்சங்க செயலாளர் சங்கர் மோசடி செய்துள்ளார். ஆனால் இவ்வழக்கில் தேவையில்லாமல் ரேஷன் கடை பணியாளர் ராமலிங்கம் என்பவர் ரூ.64 ஆயிரம் மோசடி செய்ததாக கைது செய்தனர். அவர் தான் செலுத்திய ரூ.64 ஆயிரம் ரசீது அளித்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்று வரை அவருக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டவில்லை. தவறு செய்வதர் சுதந்திரமாக உள்ளார். தவறே செய்யாதவர் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டித்தக்கது. எனவே மேற்கண்ட நியாயவிலைக்கடை பிரச்சனைகளில் முதல்வர் தலையிட வலியுறுத்தி வருகிற செப்.5-ம் தேதி சென்னை கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகம் முன்பு மதிய இடைவேளையின் போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மானியத்தை ரத்து செய்வதற்கு கண்டனம்: மானியத்தை ரத்து செய்யப்போவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மானியத்தை ரத்து செய்தால் கேஸ், பெட்ரோல், டீசல், உரம் ஆகியவை விலை உயர்வினால் அடித்தள மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். விவசாயம் பாதிக்கும் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின் போது அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில பொருளாளர் சா.ராமச்சந்திரன், துணைத் தலைவர் எம்.ராமலிங்கம், மாவட்டத் தலைவர் துரை.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.