பழனியில் நீர்நிலை ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம்
பழனியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பழனியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பழனி நகரின் மையப்பகுதியில் உள்ளது வையாபுரி கண்மாய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வையாபுரி கண்மாய் ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகியன இணைந்து அகற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமரபூண்டி அருகே மாற்று இடம் வழங்கப்பட்டது. தற்போது வையாபுரி கண்மாய் மற்றும் சிறுநாயக்கன் குளம் ஆகியவற்றின் நீர்ப்பிடிப்பை பாதிக்கும் வண்ணம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படுள்ளதாக விவசாயிகள் சங்கம் கடந்த சிலவருடம் முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டிலும் விவசாயிகள் சங்கத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மதனபுரம் அருகேயுள்ள வையாபுரி குள ஆக்கிரமிப்புப் பகுதியில் சுமார் 40 வீடுகள் உள்ளன.
இப்பகுதியினர் கடந்த சில காலமாக மேற்படி பகுதி பாறைப்பகுதி என்றும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிய நிலையில் தற்போது பொதுப்பணித்துறையினர் இவர்களை காலி செய்து கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சிறுநாயக்கன்குளம் நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு எனப்படும் காமராஜ் நகர் பகுதியில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இவர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படாத நிலையில் இங்கும் வரும் 21ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றம் உண்டு என தெரியவருகிறது. இப்பகுதியில் வாழும் அடித்தட்டு மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை மதனபுரம், காமராஜ்நகர் வாசிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியை கட்டி வீடுகள் முன் அமர்ந்து கொண்டு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு முன்னதாக பல்வேறு கட்டங்களில் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி அரசுக்கு கோரிக்கையை முன்வைப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். வயதான மூதாட்டிகள் பலரும் உயிர் இருக்கும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காமராஜ் நகரை சேர்ந்த குணா என்பவர், தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல்வாதிகள் உங்கள் இடத்துக்கு நாங்கள் கியாரண்டி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பட்டா வழங்குவோம் என்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின் அதை மறந்து விடுகின்றனர் என்றார்.
சுந்தரி என்பவர் கூறும்போது, சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது கூட ஆளும் கட்சியினர் நாங்கள் வெற்றி பெற்றால் உங்கள் இடம் உங்களுக்கே என்றனர். வெற்றி பெற்று நன்றி அறிவிப்பும் கூறி சென்று விட்டனர். இப்பிரச்னைக்கு இதுவரை யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றார். ராஜா என்பவர் கூறும்போது, நாங்கள் வசிக்கும் பகுதி முழுக்க, முழுக்க பாறைப்பகுதி. இதை பார்க்காமலே வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்ப்பிடிப்பு என பதிவு செய்துவிட்டனர் என்றார்.
மேற்படி நகர்வாசிகளுக்கு பழனியில் இருந்து சுமார் 15கி.மீ தொலைவில் மரிச்சிலம்பு அருகே தலா 3 சென்ட் வழங்க வருவாய்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்த பகுதியில் முற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கூலி வேலை செய்யும் நாங்கள் தினமும் ரூ.20 செலவு செய்து பழனி வரமுடியாது. எங்களுக்கு பட்டாகூட வேண்டாம். தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யவுள்ளோம். தவறினால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்துதர தயாராகவுள்ளோம். அதற்காக நகரிலேயே அதை செய்து தர இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.