3 மாத கால பாஜக ஆட்சியில் விலைவாசி ஏறுமுகம்: ஜி.கே.வாசன்
மூன்று மாத கால பாஜக ஆட்சியில் விலைவாசி ஏறுமுகமாக இருந்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டினர்.
மூன்று மாத கால பாஜக ஆட்சியில் விலைவாசி ஏறுமுகமாக இருந்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டினர்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறுகளை சுட்டி காட்டவும், தட்டி கேட்கவும், கண்டிக்கவும் நாட்டில் எதிர்கட்சி வேண்டும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் பா.ஜ.க. தங்களின் செயல்களை தட்டி கேட்க எதிர்கட்சி இருக்க கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதனை ஒருபோதும் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இலங்கை ராணுவம், இந்திய மீனவர்களின் 63 படகுகளை சிறைபிடித்து நீண்ட நாள்கள் ஆகியும் விடுவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் படகுகளை ஒப்படைக்க முடியாது என கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
மீனவர் பிரச்னை தொடர்பாக ஆக.29–ம் தேதி புதுதில்லியில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர சுமூக தீர்வு காண வேண்டும்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதில் காங்கிரஸுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டினை காங்கிரஸ் பேணி பாதுகாத்து வருகிறது. ஆனால் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த ஆதரவை மதவாத கொள்கைகளுக்கு கிடைத்த ஆதரவாக பாஜக எண்ணி விட கூடாது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் பலமான இயக்கமாக உருவாகும். பாஜகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் அளிக்காத அரசாக இருக்கிறது. விலைவாசி தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
நான் தனிக்கட்சி தொடங்குவதாக வரும் செய்திகள் தவறானவை. தவறான செய்திகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. பிரியங்காவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக சோனியா காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது உள்ளாட்சிகளில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாநிலப் பொதுச்செயலர் விடியல் எஸ்.சேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஈ.பி.ரவி (மாநகர்), விஜயகுமார் (ஈரோடு தெற்கு), மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.