மேலப்பாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீஸார் மீது கல்வீச்சு: போலீஸ் தடியடி, பாஜக, இந்து முன்னணி மறியல்
மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் திடீரென போலீஸார் மீது கல்வீசப்பட்டது. இதில் காவலருக்கு காயம் ஏற்பட்டது.
மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் திடீரென போலீஸார் மீது கல்வீசப்பட்டது. இதில் காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட ரகளையில் போலீஸார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் ஸ்ரீவிவேகானந்த மகாசபை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை சொக்கநாதர் கோயில் சன்னதி திடலில் இருந்து 12 அடி உயர விநாயகர் சிலை உள்பட 111 சிலைகளுடன் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பாஜக மற்றும் பாஜகவினர், இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் குமாரவேல், உதவி ஆணையர் மாதவன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த விநாயகர் ஊர்வலம் குறிச்சி அழகிரிபுரத்தை கடந்த போது, திடீரென போலீஸார் மீதும், அழகிரிபுரம் மீது கல்வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கல்வீச்சில் ஆயுதப்படை காவலர் மாரியப்பன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட ரகளையை தொடர்ந்து போலீஸார் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதைஅடுத்து விநாயகர் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியினர் குறிச்சி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மேலப்பாளையம் நோக்கி அரசு நகரப் பேருந்து மீது கல்வீசியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துணை ஆணையர் து.பெ. சுரேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த பாஜக, இந்து முன்னணியினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.