விளை நிலங்களை பாதுகாக்க மக்கள் மரம் நட வேண்டும்: நடிகர் விவேக் வலியுறுத்தல்
மழை குறைந்ததால் விவசாயம் அழிந்து விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் மழை வளம் பெற முடியும் என நடிகர் விவேக்
மழை குறைந்ததால் விவசாயம் அழிந்து விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் மழை வளம் பெற முடியும் என நடிகர் விவேக் குறிப்பிட்டார்.
கிரீன் குளோப், கோபாலசமுத்திரம் கிராம உதயம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சியில் உடையாம்புளி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியத்தில் கோமனேரி ஆகிய 2 கிராமங்களை தத்து எடுத்து அக்கிராமங்களில் தலா 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதன் மூலம் அக்கிராமங்களை பசுமை கிராமமாக உருவாக்க திட்டமிடப்பட்டு்ள்ளது.
சனிக்கிழமை உடையாம்புளி. கோமனேரியில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை நடிகர் விவேக், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அப்போது நடிகர் விவேக் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு்ள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதயம் அமைப்பின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வறட்சியான 2 கிராமங்களை தத்தெடுத்து பசுமை கிராமத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.
மழை குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு்ள்ளது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுக்க வேண்டும். விளை நிலங்களை பாதுகாக்க மழை வளம் வேண்டும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் மழை வளம் கிடைக்கும். அப்துல்கலாம் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் மக்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன்.அரசு சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. கிரீன்குளோப் அமைப்பின் மூலம் மரம் நடப்படுகிறது. எங்களது இந்த பணிக்கு தமிழக அரசின் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
வி. பொன்ராஜ் பேசியதாவது:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் நம் நாடு பசுமை நாடாக மாறும். மரம் நடுவதன் அவசியத்தை மக்கள் அறிய வேண்டும். மரம் வளர்ப்பதால் மழை வளம் கிடைக்கும். விவசாயம் செழிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மக்களின் வாழ்த்தை தரம் உயரும் என்றார் அவர்.
கொட்டும் மழையில்: விழா நடைபெற்றபோது, அக்கிராமத்தில் மழை பெய்தது. மழையை பொருட்படு்த்தாமல் மக்கள் கலந்து கொண்டனர். நடிகர் விவேக் கொட்டும் மழையில் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் எல். சந்தானமுத்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அர்ச்சுனன், ஊராட்சித் துணைத் தலைவர் முருகன், கிராம உதயம் அறங்காவலர் பழனி, ஆலோசனைக்குழு உறுப்பினர் முருகன், வழக்குரைஞர் சு. பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.