மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நெல்லையில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருநெல்வேலியில் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.பெருமாள் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் ப.ஆ.சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து மாநில மாணவரணி அமைப்பாளர் தி.மு.ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் பண்பாடு மற்றும் கலாசார சீரழிவுக்கு மது வழிவகுத்து வருகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. கட்சியின் பொதுச்செயலர் வைகோ பலஆயிரம் கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கோவையில் பிரமாண்ட மாரத்தான் போட்டியும் நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலியிலும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். பூரண மதுவிலக்கு வரும் வரை ம.தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்றார்.