முகப்பு
தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் வெள்ளம்: நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிநீர் திட்ட உறைகிணறுகள், நீரேற்றும் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின்மோட்டார் பழுடைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குடிநீர் திட்ட உறைகிணறுகள், நீரேற்றும் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின்மோட்டார் பழுடைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பிய நிலையில் அணைகளுக்கு வரும் உபரிநீர் கடந்த 2 தினங்களாக தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை 13 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. மேலும் பாபநாசம் கீழ் அணை, ஆற்றின் கரையோரப் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் செல்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமிரவருணி ஆற்றில் இருந்து இம்மாவட்ட மக்களுக்கு குடிநீர் திட்டங்கள் அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட உறைகிணறுகளில் இருந்து நீரேற்றும் நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

கரையோரமாக உள்ள குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின்மோட்டார் பழுதடைந்தது. கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிக்கு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையம் சின்னசங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளம் சூழ்ந்ததால் மின்மோட்டார் பழுதடைந்தது.இதேபோல் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், ஆலடியூர், கோடாரங்குளம், ஊர்க்காடு, வீரவநல்லூர், வெள்ளங்குளி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, கூனியூர், பத்தமடை, மேலசெவல், கோபாலசமுத்திரம், முக்கூடல், அரியநாயகிபுரம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரமாக உள்ள ஊர்களுக்கான குடிநீர் திட்டங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

கருணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம் உள்ளிட்ட கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்கள் நீரில் மூழ்கியதால் குடிநீர் திட்ட உறைகிணறுகளில் இருந்து நீரை நீரேற்றும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

தாமிரவருணி ஆற்றில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலம் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செயல்படுத்தப்படும் குடிநீர் திட்ட உறைகிணறுகள் நீரில் மூழ்கியதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் குறைந்த பின்னர்தான் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன், நிர்வாகஅதிகாரி ஆ. முத்துக்குமார் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தாமிரவருணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரமாக வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். மேலும் ஆற்றில் உள்ள குடிநீர் திட்ட உறைகிணறுகள் நீரில் மூழ்கியதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. பேரூராட்சி 15, 17, 19 ஆவது வார்டுகள், 18 ஆவது வார்டில் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. பேரூராட்சி பிற பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →