முகப்பு
தற்போதைய செய்திகள்

ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி:நடிகர் விஜய்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கத்தி திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

பணம் கொடுத்து திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளி என்றார் நடிகர் விஜய்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கத்தி திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய் மேலும் பேசியதாவது:

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. ஊரின் பெயரிலேயே மூன்றும் அமைந்திருப்பது திருநெல்வேலி. அதாவது திரு என்றால் மரியாதை, நெல் என்றால் உணவு, வேலி என்றால் பாதுகாப்பு.  அல்வா என்பது இந்த ஊரின் தனிச்சிறப்பு. விவசாயத்துக்கு பெயர்பெற்ற இந்த ஊரில் கத்தி திரைப்படத்தின் வெற்றி விழா நடப்பது பொருத்தமானது. வெற்றி-தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாக செய்தால் வெற்றி. கடமைக்காக செய்தால் தோல்வி. கத்திப் படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாக செய்ததால் கத்தி படம் வெற்றியைத்தந்துள்ளது.

கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போட விடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்த செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக்கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும். தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை, விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை என்பார்கள் என்னைப் பொருத்தவரை தட்டியும் கொடுக்க வேண்டாம், விட்டும் கொடுக்க வேண்டாம். எதிரிகளை அவர்களது போக்கிலேயே விட்டு வெற்றி காண வேண்டும். உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

குடும்பத்தைக் கவனிக்காமல் எனக்கு ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனைவி கடவுள் தந்த பரிசு, தாய் கடவுளுக்கு நிகரான பரிசு, நண்பன் கடவுளுக்கும் கிடைக்காத பரிசு என்பதை உணர்ந்து வாழ வேண்டும். பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்திப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த விழாவில்  நடிகர் சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →