முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியில் லாரி மோதி 2 சிறுமிகள் சாவு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற 2 சிறுமிகள் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 27 டிசம்பர், 2014 at 10:04 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:16 PM

திருச்சியில் சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற 2 சிறுமிகள் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி பாலக்கரை அருகேயுள்ள பூந்தோட்டம் ஜெயில் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஷகானா (12). அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது வீட்டுக்கு உறவினரான திண்டுக்கல் மாவட்டம், பழனி, பாலசமுத்திரம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் மகள் நவ்பியா பானு (10) வெள்ளிக்கிழமை வந்தார்.

Advertisement

இந்நிலையில், ஷகானா சனிக்கிழமை இரவு தனது சைக்கிளில் நவ்பியா பானுவை அழைத்துக் கொண்டு மதுரை சாலையிலுள்ள தனது தந்தையின் கடைக்கு சென்றுகொண்டிருந்தார்.

பாலக்கரை கால்நடை பன்முக மருத்துவமனை அருகே சென்றபோது பின்னால் சர்க்கரை மூட்டை ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த ஷகானா, நவ்பியா பானு மீது லாரி ஏறியது. இதில் சிறுமிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் லாரியின் கண்ணாடியை உடைத்தும், லாரியில் இருந்த சர்க்கரை மூட்டைகளை சாலையில் வீசியும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பாலக்கரை, காந்தி சந்தை, திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமிகளின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. லாரி ஓட்டுநர் லால்குடியை அடுத்த மாந்துறை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர்.இந்த விபத்தினால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.