கொள்கை, கோட்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டதே விடுதலை சிறுத்தைகள் கட்சி: தொல்.திருமாவளவன்
பழனியில் கடந்த செப்டம்பர் மாதம் முன் விரோதம் காரணமாக பாலாஜி, உதயகுமார் ஆகிய இருவர் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி
தமிழ்நாட்டில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை, கோட்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டதே விடுதலை சிறுத்தைகள் கட்சி என கட்சியின் தலைவர் திருமாவளவன் உரை நிகழ்த்தினார்.
பழனியில் கடந்த செப்டம்பர் மாதம் முன் விரோதம் காரணமாக பாலாஜி, உதயகுமார் ஆகிய இருவர் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி தலையூத்து அருகே முத்துக்குமார் என்ற கல்லூரி மாணவர் தனது தோழியை சந்திக்க சென்ற போது மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவங்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு சாதி கௌரவப்படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் பழனி நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், தமிழகம் முழுக்க சாதியின் பெயரால் கௌரவப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றது. தென் மாவட்டங்களில் மட்டும் இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தால் மரணமடைந்துள்ளனர். இதை தட்டிக்கேட்க வேண்டிய போலீஸார் கைகட்டி நிற்கின்றனர். காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுக்க கூட முடியாத நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் சாதி, இன மோதல்கள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசுக்கு தேசிய அளவில் அவமானத்தை தேடித்தருவதாக உள்ளது. சமீபத்தில் தேனியில் பிரேத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் மறியல் நடத்தியபோது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை போலீஸார் குற்றவாளியைப் போலவே பார்க்கின்றனர். இந்நிலையில் நாங்கள் பி.சி.ஆர்., வழக்கு போடுவதாக எங்களை குறை கூறுகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற படுகொலையை மக்கள் மறக்கவில்லை.பாரத பிரதமராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னரே தாழ்த்தப்பட்ட, பிற மதத்தினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. விநாயகர் ஊர்வலத்தின் போது பிரச்னைகள் ஏற்படுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் இந்துத்வா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகும். சாதி, மத மோதல்களுக்கு அப்பாற்பட்டு பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகள், கோட்பாடுகளுக்காகவே கட்சி உருவாக்கப்பட்டது. அந்த பாதையை விட்டு விலக மாட்டோம். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது கணக்கு கிடையாது. தேர்தலில் எத்தனை முறை தோற்றாலும் மேற்கொண்ட கொள்கைகள் தோற்காது. போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தம் மேற்கொள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகம் முழுக்க பல்வேறு கொலை வழக்குகள் குறித்து சிபிஐ நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாலாஜி, உதயகுமார், முத்துக்குமார் பெற்றோர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தைக்கு தமிழ்ஓளி என்று பெயர் சூட்டப்பட்டது. ஆர்ப்பாட்ட முடிவில், மேற்கண்ட வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும், சாதிக்கொலைகளுக்கு எதிராக உடனடியாக சட்டம் நிறைவேற்றவும், தேசிய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கும், பழனியருகே இறந்து போன முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் மற்றும் அரசுப்பணி வழங்கவும், சாதி கவுரவப்படுகொலைகளுக்கு எதிராக மாநில அரசு தனியே சட்டம் இயற்றவும், பாலாஜி, உதயகுமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.