கொடைக்கானலில் மர்ம விலங்கு தாக்கி 4-ஆடுகள் சாவு
கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(17)இவர் 10-ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் வழக்கம் போல தனது வீட்டிலிருந்து ஆடுகளை
கொடைக்கானலில் மர்ம விலங்கு தாக்கி 4-ஆடுகள் இறந்துள்ளது குறித்து வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(17)இவர் 10-ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் வழக்கம் போல தனது வீட்டிலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து சீனிவாசபுரம் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் விட்டு மேய்த்து வருவது வழக்கம்.
இந் நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார் மாலை நேரமானதால் மேய்ச்சலில் விட்ட இடத்திலிருந்து ஆடுகளை ஓட்டிச் செல்ல வந்துள்ளார் அப்போது 4-ஆடுகள் காணாமல் போயிருந்துள்ளது பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை.இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை பொது மக்கள் மர்மமான முறையில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தின் அருகில் ஆடுகள் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியைகள் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்போது மர்ம விலங்கு ஆடுகளின் கழுத்து,வயிறு போன்ற பகுதிகளை கடித்து குதறியுள்ளது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வெப் கேமரா வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் பார்த்தால் தெரியும் எனக் கூறி கேமராவைப் பார்த்துள்ளனர் அப்போது ஆடுகளை நாய்கள் குதறிக் கொண்டிருந்தக் காட்சி படமாகியிருந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ரேஞ்சர் சக்திவேல் கூறியதாவது,
இறந்த ஆடுகளை எந்த விலங்குகள் கடித்து குதறியது குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும்.இருப்பினும் தற்போது மலைச் சாலைகளில் குரங்குகள்,நாய்கள் அடிக்கடி இறந்து வருவது தெரிய வருகிறது இது குறித்து வனத்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.