பாளையங்கோட்டையில் சிறை அங்காடி திறப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விருப்பமுள்ள கைதிகளுக்கு பல்வேறு வகையான தொழில்பயிற்சிகள் அளிக்கப்பட்டு
பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே சிறை அங்காடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விருப்பமுள்ள கைதிகளுக்கு பல்வேறு வகையான தொழில்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தையல், தின்பண்டம் தயாரிப்பு, தோட்டப்பணி போன்றவற்றில் கைதிகள் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலும் கைதிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொள்முதல் செய்து, சென்னையில் திறக்கப்பட்ட முதல் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து சிறைகளின் அருகிலேயும் இதுபோன்ற சிறை அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே சிறைஅங்காடி சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிறை கண்காணிப்பாளர் கனகராஜ் திறந்து வைத்தார். கூடுதல் கண்காணிப்பாளர் அன்பழகன், ஜெயிலர் கிருஷ்ணராஜ் உள்பட அரிமா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த சிறை அங்காடி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இதில், 2 கைதிகள் விற்பனையாளராகவும், 2 சிறைத்துறை அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் அல்வா: 100 கிராம் அளவு கொண்ட சீவல், மிக்சர், இனிப்பு வகைகள் ரூ.14-க்கும், பல வண்ணங்களில் எளிதில் தீர்ந்துபோகாத மெழுகுவர்த்தி ரூ.80-க்கும், அட்டையினால் செய்யப்பட்ட கோப்புகள் ரூ.12-க்கும் விற்பனையாகின்றன. பாக்குமட்டைகளில் தயார் செய்யப்பட்ட தட்டுகள் அவற்றின் அளவுக்கு ஏற்ப ரூ.2.50, ரூ.4.50 விலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் அல்வாவும், பாளையங்கோட்டை சிறையில் தயாரிக்கப்படுகிறது. அதுவும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இங்கிருந்து வேலூர், சென்னை சிறை அங்காடிகளுக்கும் அல்வா தயார் செய்து அனுப்பப்படுகிறது.
சிறையில் உள்ள தண்டனை கைதிகளில் நன்னடத்தை குணம் கொண்டவர்களே சிறைஅங்காடியில் விற்பனை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பல ஆண்டுகள் சிறையில் கழித்த, பக்குவப்பட்டவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். காவலர்களும் எப்போதும் சிறை அங்காடியில் பணியில் இருப்பர். சிறை அங்காடிக்கான கட்டடத்தையும் சிறைவாசிகளே கட்டி முடித்துள்ளனர்.
குறைந்த விலையில் அயர்ன்:பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கீரை வகைக்கள், காய்கனிகளை பயிரிட்டு கைதிகள் வளர்த்து வருகின்றனர். இந்த காய்கனிகளும், கீரை வகைகளும் சிறை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இதுதவிர மிகவும் குறைந்த விலையில் ஆடைகளை அயர்ன் செய்து வழங்குதல், சிற்றுண்டி விற்பனை திட்டமும் உள்ளதாம். முதல் நாளான சனிக்கிழமை மாலை வரை ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் விற்றுத்தீர்ந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.