விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்முரமாக நடந்து வருகிறது. அதில், முதல் கட்டமாக வாக்கு பதிவு இயந்திரம் இயங்குகிறதா என சரிபார்த்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 1696 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
இந்த ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களைச் சேர்ந்த தேர்தல் பிரிவு வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பாதுகாப்பு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதா, மாற்றுத்திறனா்ளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டனர். அதேபோல், ஒவ்வொரு மையத்திலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, ஜன்னல் வசதி மற்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் மக்களவைத் தேர்தலில் பதட்டமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா பொறுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட இருக்கிறது.
அதனால் குறிப்பிட்ட வசதிகள் இல்லாத மையங்களை கண்டறிந்து, அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.