முகப்பு
தற்போதைய செய்திகள்

தொண்டர்கள் பலத்தினால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி: ஞானதேசிகன்

தொண்டர்களின் பலத்தினால் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்

Updated On : 5 பிப்ரவரி, 2014 at 7:29 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:49 AM

தொண்டர்களின் பலத்தினால் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்புத்தர வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பாஜகவுக்கு எதிராகவும், ராகுல் காந்தி, ஜி.கே. வாசன் ஆகியோர் ஊழல் தலைவர்கள் என்று விமர்சித்த ஆம் ஆத்மி கட்சியைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.

Advertisement

அப்போது ஞானதேசிகன் பேசியது:

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரசாரம் செய்ய வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்று இன்னும் பல முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியவில்லை. இது குறித்து மக்களிடம் காங்கிரஸார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக சிலர் பேசுகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் காங்கிரஸôர் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

தொண்டர்களின் பலம், மன உறுதியும் காங்கிரஸ் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 12-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸார் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.