முகப்பு
தற்போதைய செய்திகள்

சமூகநீதி காக்கும் முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார்: அமைச்சர் எம்.சி.சம்பத்

சமதர்ம சமுதாயத்தை நிலை நிறுத்த அனைத்து சமுதாய மக்களின் சமூகநீதி காக்கும் முதல்வராக, தமிழக முதல்வர் ஜெயலலிதா திகழ்கிறார் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

சமதர்ம சமுதாயத்தை நிலை நிறுத்த அனைத்து சமுதாய மக்களின் சமூகநீதி காக்கும் முதல்வராக, தமிழக முதல்வர் ஜெயலலிதா திகழ்கிறார் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையினர் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முதல்வரின் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் செய்தி மக்கள்-தொடர்பு அதிகாரி கு.தமிழ்செல்வராஜன் வரவேற்றார். கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் ரா.புவனேஸ்வரி தலைமை வகித்தார். காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் முன்னிலை வகித்துப் பேசினார்.

விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று 671 பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு 4 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ50 ஆயிரத்திற்கான காசோலையையும் வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு முதல் ஆண்டு 750 கோடியும், இரண்டாவது ஆண்டு 750 கோடியும், இந்த ஆண்டு 2250 கோடியும் நிதி ஒதுக்கி வழங்கி வருகிறார். வாங்கும் சக்தி குறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு விலையில்லா பொருள்களை வழங்கி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்ற போது 4 கிராம் தங்கம் ரூ.10 ஆயிரம் இருந்தது. 11 முறை விலை உயர்ந்து தற்போது ரூ.12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் 4 கிராம் தங்கத்தை முதல்வர் வழங்கி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

தற்போது கடும் நிதிச் சூழல் இருந்தாலும் தமிழக பட்ஜெட்டில் 3-ல் 1 பங்கு நிதியான மானிய திட்டங்களுக்கும், விலையில்லா பொருள்கள் வழங்கவும், தாலிக்கும் தங்கம் வழங்கவும் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு 49 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். மிக்சி, கிரைண்டர், பேன் வழங்க ரூ 8 ஆயிரம் கோடியும், விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1100 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டத்திற்கு 2751 கோடி 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கம் வழங்க தங்கம் வாங்க 204 கோடியும், காசோலை வழங்க ரூ.547 கோடியும் நிதியும் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

விழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, முன்னாள் அமைச்சரும், புவனகிரி எம்எல்ஏவுமான செல்விராமஜெயம், சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), வி.ஆர்.ஜெயபாலன் (கீரப்பாளையம்), ஏ.ஜி.கீதா (புவனகிரி), கே.அசோகன் (பரங்கிப்பேட்டை), கே.மணிகண்டன் (காட்டுமன்னார்கோயில்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் ரா.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.