தாமதமாக இருந்தாலும் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது: நளினியின் தந்தை பேட்டி
தீர்ப்பு தாமதமாக கிடைத்திருந்தாலும் நளினி, முருகன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என நளினியின் தந்தை சங்கரநாராயணன் (90) தெரிவித்தார்.
தீர்ப்பு தாமதமாக கிடைத்திருந்தாலும் நளினி, முருகன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என நளினியின் தந்தை சங்கரநாராயணன் (90) தெரிவித்தார்.
நளினியும், முருகனும் நெல்லை வந்து என்னை சந்திக்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே. புரத்தை அடுத்த அம்பலவாணபுரத்தில் வசித்து வருகிறார் சங்கரநாராயணன். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான இவர், உடல் நலக்குறைவு காரணமாக அம்பலவாணபுரத்திலேயே தனியாக வசித்து வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்வதாக தமிழக அமைச்சரவைக் கூடி முடிவு செய்துள்ள தகவல் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரநாராயணன்.
அப்போது, அவரது வீட்டுக்கு வந்த செய்தியாளர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எப்போதும், செய்தியாளர்கள் சந்திப்பதை தவிர்த்து வரும் சங்கரநாராயணன், விடுதலை குறித்த அறிவிப்பை கேட்ட மகிழ்ச்சியில் அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து பேசினார்.